×

நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பச்சைத் துரோகம்: வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட இயற்கை பேரிடர், மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளப் பாதிப்புகளுக்காக தமிழ்நாட்டிற்கு ரூ.37,907 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெருமழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் ஆக மொத்தம் ரூ.276 கோடியை மத்திய அரசு நேற்று விடுவித்துள்ளது. தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில், ஒன்றிய அரசு ஒரு சதவீதத்திற்கு கீழே அதாவது 0.78 சதவீதம் மட்டுமே இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்கிறது.

ஆனால் கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி பாதிப்புக்காக மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ரூ.3498.82 கோடி அளித்திருக்கிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை குறி வைத்துதான் கர்நாடக மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளது. தமிழ்நாட்டை பாஜக அரசு வஞ்சித்து வருவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு ஒன்றியத்திற்கு வரியாக கொடுக்கும் ஒரு ரூபாயில் 29 பைசா மட்டுமே திரும்பப் பெறுகிறது. ஆனால் பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்திற்கு ஒரு ரூபாய்க்கு இரண்டு ரூபாய் 73 பைசா ஒன்றிய அரசு வழங்குகிறது.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ.63 ஆயிரத்து 246 கோடி ஆகும். இதில் ஒன்றிய அரசு 50 சதவீதம் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டும். ஆனால் இதுவரை 3273 கோடி ரூபாய் அதாவது திட்ட மதிப்பில் வெறும் 5 சதவீதம் மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது. அதிக வரி அளிக்கும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பாஜக அரசு நிதி பகிர்வில் பச்சைத் துரோகம் இழைத்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். 18 வது மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி மக்களின் பேராதரவோடு வெற்றி ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி. அப்போது மாநிலங்களின் உரிமைகள் காப்பாற்றப்படும்; நிதிப் பகிர்வில் தற்போதுள்ள பாரபட்சமான அணுகுமுறைக்கு முடிவு கட்டப்படும்.

The post நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பச்சைத் துரோகம்: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Vigo ,CHENNAI ,Madhyamik General Secretary ,Vaiko ,government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...